அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.
சென்னை,
மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) கலந்தாய்வு தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது.
அதன்படி, அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) 268 முதல் 633 தரவரிசையில் (நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 634 முதல் 951 தரவரிசையில் (நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்குபெற உள்ள மாணவ-மாணவிகளுக்கான அழைப்பு கடிதத்தை www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.inஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்படாது என்றும், கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக, கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு வந்துசேர வேண்டும் என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை இணையதளத்தைப் பார்க்கலாம்.
வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கலந்தாய்வு நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story