நவ.22-ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
நவ.22-ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் பெற்று வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையும் பறிக்கப்பட்டிருக்கிறது. விளைபொருட்களை விற்று வந்த விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சந்தைக்கு பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே முடிவு செய்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி, பலகட்டப் போராட்டங்களைத் தமிழக காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாகப் போராட்டம் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி திருவண்ணாமலையில் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தினோம். இதன்மூலம் தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தினோம்.
மேலும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கிறது. இந்தக் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவரிடம் விரைவில் ஒப்படைக்க இருக்கிறோம்.
விவசாய விரோதச் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெறுகிற வரை தொடர்ந்து போராடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. வருகிற நவம்பர் 22ஆம் தேதி கோயம்புத்தூர், கருமத்தம்பட்டி, சோமனூர் மெயின் ரோட்டில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பைப் பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் முன்னோடிகளுடன் நானும் பங்கேற்க இருக்கிறேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிற அளவில் கோவையில் நடைபெறும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாட்டிலும், ஏர் கலப்பைப் பேரணியிலும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன் செய்து வருகிறார்.
இதையொட்டி, நவம்பர் 28 ஆம் தேதி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணி நடைபெற இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியில் நான் பங்கேற்க இருக்கிறேன். அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு சேலத்திலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டிலும், சு.திருநாவுக்கரசர், எம்.பி., திருச்சியிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் கே.ஜெயக்குமார், எம்.பி., எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்.பி., மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ஏர் கலப்பைப் பேரணியைத் தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்குள்ளாக தங்கள் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி எல்லைக்குட்பட்ட எஞ்சியுள்ள மற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏர் கலப்பைப் பேரணி தொடர்ந்து நடைபெற உள்ளது. ஏர் கலப்பைப் பேரணி நடைபெறும் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்கிற உணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். பலகட்டப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story