பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிப்பதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 19 Nov 2020 12:21 AM IST (Updated: 19 Nov 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி வழங்கியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மீனவர்கள், உழவர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான 5&ஆம் சுற்று ஏலத்தில் மொத்தம் 19,789 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமங்களை வழங்கியுள்ளது. இவற்றில் 7 உரிமங்கள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், 4 உரிமங்கள் ஆயில் இந்தியா  நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 7 உரிமங்களில் ஒன்று காவிரி டெல்டாவை  ஒட்டிய கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கானது ஆகும்.

புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் 4,064.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவர்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஏல அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட போதே, மக்களை பாதிக்கும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்; அதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று ஜனவரி 17-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களின் மனநிலையும் இந்தத் திட்டத்திற்கு எதிராகவே உள்ளது. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் காவிரி டெல்டாவில் இன்னொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணித்திருப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும்.

புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும் முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதிகள் தான் மீன் வளம் மிகுந்த ஆழ்கடல் பகுதிகள் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால், அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரங்களைத் தேடி இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்படும்.

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் வாதிடப்படலாம். ஆனால், இந்தத் திட்டத்தால் நிலப்பகுதிகள் பாதிக்கப்படாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மேலும் இந்த திட்டத்தின்மூலம் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கொண்டுவர விளைநிலங்களில் குழாய்கள் புதைக்கப்படும் என்பதால், அது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து போராடி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், அரசியல்ரீதியாக தமிழக அரசுக்கு அளித்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி 9&ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதற்குப் பிறகும் காவிரி பாசன மாவட்டங்களையொட்டிய கடல் பகுதியில்  புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பது நியாயமல்ல; அதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் இதுவரை 3,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உரிமம் வழங்கப்பட்ட 4 திட்டங்களின் ஒட்டுமொத்த பரப்பை விட அதிகமாக, 4,064 சதுர கி.மீ பரப்பளவில் ஐந்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவின் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பரப்பளவை விட மிக அதிகமாகும். இதைவைத்துப் பார்க்கும் போது காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற மத்திய அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் 3 போகம் விளையும் காவிரிப் பாசன மாவட்டங்களில் விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதை சிதைக்கும் வகையிலான எந்த செயலிலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள 5-ஆவது உரிமம் மட்டுமின்றி, ஏற்கனவே காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வழங்கப்பட்ட உரிமங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story