மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக வலிந்து திணித்த மத்திய பா.ஜ.க. அரசு அதற்கு கூறிய காரணம், ‘நாடு முழுவதும் வெவ்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது என்பதால் அந்த சுமையை குறைக்கிறோம்’ என்று தெரிவித்தது.
ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான ‘நீட்’ தேர்வு பொருந்தாது. எனவே தேவை இல்லை என்று முடிவெடுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் ‘நீட்’ நடத்துவது ஏன்?
மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மட்டும்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையா? தமிழகத்தில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி. முக்கியத்துவம் அற்றதா? மத்திய பா.ஜ.க. அரசின் அளவுகோல் என்ன? எனவே இனி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story