2-வது தவணை கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி


2-வது தவணை கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 18 Nov 2020 8:33 PM GMT (Updated: 18 Nov 2020 8:33 PM GMT)

75 சதவீத கல்வி கட்டணத்தில் 2-வது தவணையான 35 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக்கொள்ளலாம். அந்த 75 சதவீதத்தில், 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் செலுத்தவேண்டும். மீதத் தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம்’ என்று கடந்த ஜூலை 17-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

எப்போது திறப்பு?

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த அறிவிப்பும் இல்லாததால், 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க சிரமம் ஏற்படுகிறது’ என்று தனியார் பள்ளிகள் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என்று தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

அரசு பள்ளிகளில் சேர்க்கை

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், “ஐகோர்ட்டு உத்தரவிட்டும் பல பள்ளிகள் முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தைக் கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 6 லட்சம் மாணவர்கள், மாற்றுச்சான்று இல்லாமல் அரசு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்” என்று கூறினார்.

வசூலிக்கலாம்

அதை பதிவு செய்த நீதிபதி, “தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, 75 சதவீத கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை, அதாவது 2-வது தவணையை வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதிக்குள் வசூலிக்கலாம். இந்த தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்துகொள்ளலாம்.

முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தையும், கடந்த கல்வியாண்டில் செலுத்தவேண்டிய நிலுவை கட்டணத்தையும் செலுத்தாத மாணவர்கள், அவற்றை செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

மேலும், “40 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற இந்த ஐகோர்ட்டு உத்தரவை மீறி முழு கட்டணத்தை வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரித்து, வருகிற 27-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று எச்சரித்து, விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story