நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கோவையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
நீட் தேர்வை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின்பேரில் தான் நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) காலை கூட 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்தது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அறிவித்து அதன் மூலம் 313 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்.
கஷ்டங்களை உணர்ந்தவன்
தமிழகத்தில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 பேர் பிளஸ்-2 படிக்கிறார்கள். இதில் 41 சதவீதம் பேர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். அதாவது 3 லட்சத்து 44 ஆயிரத்து 451 பேர் அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள். 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேரில் கடந்த ஆண்டு 6 பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர முடிந்தது.
நான் கிராம பள்ளியில் படித்தவன். கிராம மாணவர்களின் உணர்வுகளை உணர்ந்தவன். அதனால்தான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்து தமிழக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளித்து உள்ளது. அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்து உள்ளது.
பெருமை கொள்கிறேன்
இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. அதில் அங்கம் வகித்தபோது நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை.
நான் கிராமத்தில் இருந்து வந்தவன். ஏழை-எளிய மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக நான் பெருமை கொள்கிறேன். புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா வருகை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நடக்கும்போது அது பற்றி கருத்து சொல்வது நன்றாக இருக்காது. சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவால் தமிழகத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story