தமிழகத்தில் 779 ஏரிகள் நிரம்பின அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


தமிழகத்தில் 779 ஏரிகள் நிரம்பின அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2020 2:13 AM IST (Updated: 19 Nov 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

14 ஆயிரத்து 144 ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தற்போது எதிர்கொண்டு வரும் வடகிழக்கு பருவமழையில் நீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேற்றத்தின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் 36 மாவட்டங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் பேரிடர், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் பேரிடர் சார்பில் 24 மணிநேரம் தொடர் கண்காணிப்பு பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம். ஆதாரமற்ற செவி வழியாக கேட்கக்கூடிய செய்திகளை, தவறான தகவல்களை உள்நோக்கத்துடனே அல்லது உள்நோக்கம் இன்றியோ வெளியிட்டு வருகின்றனர். வெள்ள நீர், உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக அணைகளின் நிலைகளை பொதுப்பணிதுறை, மாவட்ட நிர்வாகம் உள்பட மாநில பேரிடர் மற்றும் பிற துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். அந்த தகவல்களின் அடிப்படையில் அரசு தரும் அறிக்கைகள், அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். வடகிழக்கு பருவமழை தொடர்பாக வதந்தி, தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

779 ஏரிகள் நிரம்பின

14 ஆயிரத்து 144 ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவினை எட்டியுள்ளது. விதிமுறைகளின்படி அதில் இருந்து உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 9 ஆயிரத்து 521 பாசன ஏரிகளில் 714 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்த அளவு நீர் மட்டுமே வெளியேற்றப்படும் சூழல் தற்போது உள்ளது.

மணிமங்கலம், சோமனூர் ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இதற்கு போதுமான ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும். காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி அதன்மூலம் நமக்கு தொடர் மழை கிடைத்தாலும் உபரி நீர் வெளியேற்றும் சூழ்நிலைவந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது.

அச்சம் வேண்டாம்

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வடகிழக்கு பருவமழை தொடர்பாக 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்-அமைச்சர், அடிக்கடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார். உயிரிழப்பு இல்லாத பேரிடரை எதிர்கொள்ளவேண்டும் என்பதே அரசின் நிலை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனர் க.பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜகந்நாதன், இணை இயக்குனர் ரா.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story