அரசின் மீது குறை கூறாமல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஸ்டாலின் கூறவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி


அரசின் மீது குறை கூறாமல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஸ்டாலின் கூறவேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 19 Nov 2020 7:45 AM GMT (Updated: 19 Nov 2020 8:59 AM GMT)

அதிமுக அரசு பல துறைகளில் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார்.
இதைத்தொடா்ந்து, வனவாசி அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாணவர் விடுதியை திறந்து வைத்தார். மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் ரூ.44.43 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று திட்டம் மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.74.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள 33 திட்ட பணிகளுக்கு தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் சார்பில் ஓமலூர் வட்டம் தாத்தையங்கார்பட்டி அரசு மேக்னசைட் சுரங்க பணியையும் தொடங்கி வைத்தார். ரூ. 46.39 கோடி மதிப்பில் 6,832 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும், அரசியலோடு செயல்படக் கூடாது.

தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால், குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை திட்டத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளது தமிழகம். அதிமுக அரசு, பல துறைகளில் தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளது.

கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே பொய்பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.  அரசின் மீது குறை கூறாமல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஸ்டாலின் கூறவேண்டும்.

ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம் என்றார்.

விழாவில் உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனா்.

Next Story