“விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை


“விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை
x
தினத்தந்தி 19 Nov 2020 12:59 PM GMT (Updated: 19 Nov 2020 12:59 PM GMT)

பல லட்சம் இளைஞர்கள் தங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உணர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரபி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது;-

“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தொல்லை அதிகமாகி இதுவரை 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்த விளையாட்டு தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தடையின்றி ஆன்லைன் சூதாட்டம்  நடைபெற்று வருகிறது.

எனவே, அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள், ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய  வேண்டும். இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கோரி இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, விளையாட்டு  வீரர்கள் கங்குலி, விராட் கோலி மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை தமன்னா  உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்,  கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய  முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நோட்டீஸ் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். 

அப்போது,  நீதிபதிகள், “நடிகர்கள், விளையாட்டு வீரர்களை பல லட்சம் இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர வேண்டும்” என்று அறிவுறுத்தினர். மேலும் ஆன்லைன் சூதாட்டதால் 11 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது  வருத்தம் அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள  வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

மேலும், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை தமன்னா ஆகியோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் உத்தரவின்பேரில் ஆன்லைன்  சூதாட்ட வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Next Story