ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: காவிரி டெல்டா அமைச்சர்கள் யாரும் வாயை திறக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி


ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: காவிரி டெல்டா அமைச்சர்கள் யாரும் வாயை திறக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 20 Nov 2020 12:00 AM GMT (Updated: 19 Nov 2020 8:16 PM GMT)

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் வாயே திறக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

பொது வாழ்வில் தூய்மை அ.தி.மு.க. அமைச்சர்களிடம் அறவே இல்லை. பேரறிஞர் அண்ணா ஆட்சி செய்தார். கருணாநிதி ஆட்சி செய்தார். அவர்களின் சாதனைகள்; தமிழகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் இன்றைக்கு ஒளி வீசுகிறது. தி.மு.க. ஆட்சியால் பயன் அடையாத ஒரு கிராமத்தைத் தமிழகத்தில் கண்டுபிடிக்க முடியாது.

அந்த அளவிற்கு மக்களின் நண்பனாக தமிழக மக்களைத் தாங்கிப் பிடிக்கும் இயக்கமாகத் தி.மு.க. இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி இருக்கிறது?. எங்கள் ஆட்சி இது என்று சொல்லிக் கொள்ள அ.தி.மு.க. தொண்டர்களே வெட்கப்படுகிறார்கள்.

அதனால்தான் மக்களுக்கு விரோதமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் முடிவு எடுத்து, தயாராக இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன்

தேர்தல் ஆணையம் கூட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. ஏன் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால் அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம். ஆகவே ஜனநாயகம் தந்துள்ள அந்த ஆயுதத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் எல்லாம் இன்னும் ஆறு மாதத்திற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நமக்காக அல்ல நம் குடும்பத்திற்காக அல்ல; இந்த நாட்டிற்காக தமிழ்நாட்டிற்காக.

ஏன் என்றால் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதுவும் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிமைகள் தாரை வார்ப்பு

நிலப்பரப்பில்-விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அளிக்கப்பட்டு விட்டதால் இப்போது ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் புகுத்துகிறார்கள். ஒரு கிலோ மீட்டர் அல்லது இரு கிலோ மீட்டர் அல்ல மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டரில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படுகிறது .

மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன் முதல்-அமைச்சரோ தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை. இப்படித்தான் அ.தி.மு.க. அரசும் அதன் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் தமிழக உரிமைகளை தாரை வார்க்கிறார்கள்.

துறவறம் போக வைக்க...

ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பயந்து நிற்கிறார்கள். ஆகவே, ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பிட ஏன் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் பின்னுக்குத் தள்ளிய இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைக்க தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாகக் பணியாற்றிட வேண்டும்.

ஒவ்வொரு தொண்டரும் ஒரு வீட்டிற்குப் பிரசாரம் என்று வைத்தால் கூட ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சந்தித்து அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி விடலாம். அதே பாய்ச்சலுடன் பிரசாரத்தில் இறங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story