வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 20 Nov 2020 9:29 AM GMT (Updated: 20 Nov 2020 9:29 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story