ரஜினி அரசியல்... குருமூர்த்தியுடன் விடியவிடிய ஆலோசனை நடத்திய அமித்ஷா?


ரஜினி அரசியல்... குருமூர்த்தியுடன் விடியவிடிய ஆலோசனை நடத்திய அமித்ஷா?
x
தினத்தந்தி 22 Nov 2020 4:44 AM GMT (Updated: 22 Nov 2020 4:44 AM GMT)

ரஜினி அரசியல் தொடர்பாக குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா விடியவிடிய ஆலோசனை நடத்தியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். 

இதனையடுத்து விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு இரவு 11 மணியவில் குருமூர்த்தி சென்றார். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா விடியவிடிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story