மாநில செய்திகள்

“7.5% இட ஒதுக்கீடு முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம்” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் + "||" + "7.5% reservation is a scheme conceived by the Chief Minister" - Minister RP Udayakumar

“7.5% இட ஒதுக்கீடு முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம்” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

“7.5% இட ஒதுக்கீடு முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம்” -  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
7.5% இட ஒதுக்கீடு முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை, 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

அதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “வருகின்ற 23, 24ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தற்போது ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கும் இடங்களை நான்கு பிரிவுகளாக பிரித்து அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கனவான மருத்துவப் படிப்பை இன்றைக்கு முதல்வர் நனவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீட்டை வழங்க சட்டப்பேரவையில் முதல்வர் மசோதா தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, அந்த மசோதாவை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி அதற்கு அரசாணை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 18 ஆம் தேதி 313 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களுக்கும், 92 பல் மருத்துவ இடங்களும் ஆக மொத்தம் 405 மருத்துவ இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஆணை வழங்கினார். 

தமிழகத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார்கள். ஏறத்தாழ 41 சதவீதமாகும். கடந்தாண்டு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 6 பேருக்கு மட்டும்தான் மருத்துவப் படிப்பு கிடைத்தது. தற்போது முதல்வர் அறிவித்த இந்த 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் 405 மருத்துவ இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளன.

அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, நகராட்சிப் பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி, பழங்குடியினர் பள்ளி, கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பு படிக்கும் 405 அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிட்டு உள்ளார்.

தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் ஆணைக்கிணங்க அதிமுக அம்மா பேரவை சார்பாக மதுரை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 14 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் அறிக்கை மட்டும் வெளியிடுவார். அதனால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இன்றைக்கு முதல்வர் அரசாணை வெளியிட்டு மாணவர்களின் கனவை நனவாக்கி உள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவப் படிப்பு உன் ஒதுக்கீட்டில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து, அதன்பின் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து அரசாணை வெளியிட்டு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பினை முதல்வர் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், எதையுமே செய்யாமல் ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். 7.5% இட ஒதுக்கீடு முதல்வர் சிந்தனையில் உதித்த திட்டம். 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்று ஒரு சமூக நீதி புரட்சியாளராக முதல்வர் திகழ்கிறார். 

இந்த நான்கு ஆண்டுகளில் 40 ஆண்டுகால வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். ஸ்டாலின் மகன் உதயநிதி படகில் போனால் என்ன? ஏன் ராக்கெட்டில் போனால்கூட முதல்வர் சாதனைத் திட்டங்களை மறைக்க முடியாது” என்று  அவர் கூறினார்.