சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை ; கடல் சீற்றம்


சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை ; கடல் சீற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2020 10:31 AM GMT (Updated: 24 Nov 2020 10:31 AM GMT)

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றது.

சென்னை: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளர்.

 நிவர் புயலை எதிர்கொள்ள கடலோர காவல்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 15 பேரிடர் மேலாண்மை குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக கடலோர காவல்படை தகவல் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசுப்பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் பணிகளில் ஈடுபடாத அரசு ஊழியர்கள் மதியமே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. கரையோரம் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், ஊரப்பாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை கொட்டித் தீர்த்தது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியில்லாத காரணத்தினால் கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர் பகுதிகளில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றது. அலை 9 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடலோர மீனவ கிராமங்களில் உள்ள மக்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாகை மாவட்டத்தில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், கரையோர மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை , புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளையும் வலைகளையும் டிராக்டர் உதவியுடன் தூரமான மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காட்டுப்பள்ளி, கோரைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர்.

நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. முதலமைச்சர் நாராயணசாமி, கரையோரப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

மீன்பிடிக்கச் சென்றவர்கள் எல்லாம் கரை திரும்பியுள்ளனர். இதனால் படகுகள், விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன. இன்று அதிகாலை முதலே புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Next Story