இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்; தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்


இன்று கரையைக் கடக்கிறது ’நிவர்’ புயல்;  தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் உச்சகட்ட உஷார்
x
தினத்தந்தி 24 Nov 2020 7:16 PM GMT (Updated: 24 Nov 2020 9:42 PM GMT)

நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.  இந்த புயலுக்கு ஏற்கனவே ‘நிவர்’ என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டிவிட்டது.

நிவர் புயலின் தாக்கம் காரணமாக  சென்னையில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கின. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் புற நகர் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


‘நிவர்’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி.போஸ் சாலை மற்றும் எசுபிளனேடு சாலை சந்திக்கும் பகுதி முழுவதும் (குறளகம் அருகில்) மழைநீர் வெள்ளமென சூழ்ந்திருப்பதையும், அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதையும் படத்தில் காணலாம்.


இன்று கரையைக் கடக்கிறது நிவர் புயல்

நிவர் புயல், தீவிர புயலாக அதனையடுத்து அதி தீவிர புயலாகவும் மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது எந்தெந்த பகுதிகளில் பலத்த காற்று எவ்வளவு வேகத்தில் வீசும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்று திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இந்த காற்று இன்று காலை முதல் இரவு வரை நீடிக்கும். இதுதவிர கடலும் இரவு வரை கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலை இயல்பைவிட 2 மீட்டர் உயரம் வரை சீற்றத்துடன்  இருக்கும்

நிவர் புயலையொட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்களை கண்காணிக்கும் பணியினையும், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் பணிகளையும் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிர்வாக கமிஷனர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகத்தில்  இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வழக்கம்போல பணிபுரிவார்கள்.


Next Story