மருத்துவ கல்லூரிகளை 1-ந் தேதிக்குள் திறக்கவேண்டும் - மத்திய சுகாதாரத்துறை, மாநிலங்களுக்கு கடிதம்


மருத்துவ கல்லூரிகளை 1-ந் தேதிக்குள் திறக்கவேண்டும் - மத்திய சுகாதாரத்துறை, மாநிலங்களுக்கு கடிதம்
x
தினத்தந்தி 25 Nov 2020 10:28 PM GMT (Updated: 25 Nov 2020 10:28 PM GMT)

மருத்துவ கல்லூரிகளை வருகிற 1-ந் தேதிக்குள் திறக்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை, மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தாக்கம் தற்போது சற்று குறைந்திருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.

2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், அதைத் தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று முடிந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:-

‘மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் கடிதம் பெற்று இருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட மருத்துவ கல்லூரிகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும் முதுநிலை மருத்துவ நீட் தேர்வுக்கு இளநிலை மருத்துவ மாணவர்களை தயார்படுத்த வேண்டி இருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் கொரோனா தவிர்த்து, பிற நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும். பேரிடர் காலத்தில் மருத்துவ சேவை பற்றி தற்போதைய மருத்துவ மாணவர்களும் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story