தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை மனமார வரவேற்கின்றேன் - முதலமைச்சர் பழனிசாமி


தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை மனமார வரவேற்கின்றேன் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 27 Nov 2020 9:07 AM GMT (Updated: 27 Nov 2020 9:07 AM GMT)

தைப்பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் ஆகிய தேசிய பண்டிகைகள் மற்றும் வடமாநிலத்தில் கொண்டாடப்படும் சில பண்டிகைகளுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் விடுமுறையில் இருக்கும். தமிழர்களின் பிரதான பண்டிகையாக கருதப்படும் பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்தில் விடுமுறை கிடையாது.

பல தமிழர்கள் வழக்கறிஞர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றி வரும் சூழலில், அவர்களுக்கு அதிகாரபூர்வ விடுமுறை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், வரும் 2021-ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், 174 நாட்கள் விடுமுறையில் இருக்கும். இதனைப்போன்று வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் மதியம் 1 மணிவரை மட்டுமே நடைபெறும். தற்போது பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட செய்தி தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15 தேதிகளில் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றது.

தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்த உச்ச நீதிமன்றத்திற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story