வருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில்


வருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 28 Nov 2020 4:21 AM GMT (Updated: 28 Nov 2020 4:21 AM GMT)

நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான வழித்தடம் மற்றும் கால அட்டவணை நெல்லை பயணிகளுக்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான வழித்தடம் மற்றும் கால அட்டவணை நெல்லை பயணிகளுக்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்-மும்பை இடையே மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. 4 நாட்கள் நெல்லை, மதுரை, சேலம், திருப்பத்தூர் வழியாகவும், 2 நாட்கள் நெல்லை, மதுரை, திருச்சி, திருத்தணி வழியாகவும் வாரத்தில் மொத்தம் 6 நாட்கள் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதில் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் வலியுறுத்தி வந்தனர். அதாவது மும்பையில் இருந்து இரவில் புறப்பட்டு நெல்லை, நாகர்கோவிலுக்கு காலை நேரத்தில் வந்து சேரும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி நாகர்கோவில்-மும்பை இடையே வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. இந்த ரெயில் திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்கிறது.

வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது. இந்த ரெயில் மும்பையில் இருந்து செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படுகிறது.

இந்த ரெயிலின் நேரம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது மும்பையில் நண்பகலில் புறப்படுவதற்கு பதிலாக இரவு 8.35 மணிக்கு புறப்படுகிறது. இதையொட்டி தமிழகத்துக்குள் வரும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

காட்பாடி ரெயில் நிலையத்துக்கு மாலை 6.15 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு 8.04 மணிக்கும், சேலத்துக்கு இரவு 10.40 மணிக்கும், கரூருக்கு 12.48 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு அதிகாலை 3.02 மணிக்கும், மதுரைக்கு 4.10 மணிக்கும், விருதுநகருக்கு 5.03 மணிக்கும், சாத்தூருக்கு 5.28 மணிக்கும், கோவில்பட்டிக்கு 5.53 மணிக்கும், நெல்லைக்கு காலை 8.15 மணிக்கும் வருகிறது. இதை தொடர்ந்து நாங்குநேரிக்கு காலை 9.06 மணிக்கும், வள்ளியூருக்கு 9.16 மணிக்கும், அதை தொடர்ந்து நாகர்கோவிலை 10.20 மணிக்கும் சென்றடைகிறது.

மேலும் இந்த ரெயிலின் வழித்தடமும் சிறிது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து தர்மாவரம் வந்தவுடன் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை செல்லாமல் புதிய வழித்தடமாக ஆந்திரா மாநிலம் சித்தூர் வழியாக காட்பாடியை வந்தடைகிறது. இதேபோல் சேலத்தில் இருந்து ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக கரூர் செல்கிறது. இதன்மூலம் ஈரோடு சந்திப்பில் என்ஜினை கழட்டி மாற்றும் காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது. இருமார்க்கத்திலும் இந்த புதிய வழித்தடத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இனிமேல் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கும்போது இந்த வழித்தடம் மற்றும் கால அட்டவணை அப்படியே செயல்படுத்தப்படும். மதுரை-நாகர்கோவில் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முடிந்த பிறகு இந்த ரெயிலின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது” என்றனர். இதனால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை தமிழின பயணிகள் நலச்சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் அப்பாத்துரை ஆகியோர் கூறியதாவது:-

மும்பை -நாகர்கோவில் ரெயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது 25 ஆண்டு கால கோரிக்கை. இதற்காக எங்களது சங்கம் சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் விடாமுயற்சி செய்து வந்தோம். பயணிகளின் கோரிக்கைக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இதனால் மும்பை எக்ஸ்பிரஸ் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மும்பையில் உள்ள தமிழின மக்கள் சார்பிலும், தமிழகத்தில் தென் மாவட்ட மக்களின் சார்பிலும் மத்திய அரசுக்கும், ரெயில்வே துறைக்கும், கோரிக்கை விடுத்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story