விவசாயிகள் மீதான அடக்குமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் - தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


விவசாயிகள் மீதான அடக்குமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் - தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Nov 2020 8:05 PM GMT (Updated: 28 Nov 2020 8:05 PM GMT)

டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதான அடக்குமுறையை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட 8 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சென்னை,

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கைவிட வலியுறுத்தியும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து தரக்கோரியும் தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட எதிர்க்கட்சியினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கடுமையான அடக்குமுறை, கண்ணீர்புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சியடிப்பு, சாலைகள் மூடல், போலீசாரின் தடுப்புகள் என டெல்லியை சுற்றிலும் விவசாயிகளுக்கு எதிராக போரிடுவது போன்ற நிலை இருந்தது. ஆனாலும் வீரமிக்க விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தேசிய தலைநகர் டெல்லி வந்தடைந்து விட்டனர். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மிகப்பெரிய போராட்டத்துக்கான அவர்களுடைய உறுதிப்பாடு மற்றும் துணிவுக்கு தலை வணங்குகிறோம்.

இதனால் விவசாயிகள் டெல்லிக்கு வருவதை தடுக்க நினைத்த மத்திய அரசு, அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. டெல்லிக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த மைதானம் போதுமானது அல்ல. எனவே விவசாயிகள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்கு இருப்பிடம் மற்றும் உணவு உள்பட தேவையான வசதிகளை செய்து கொடுப்பதோடு, ராம்லீலா மைதானம் அல்லது அதற்கு இணையான பெரிய இடத்தையும் வழங்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிப்பதாகவும், அன்னமிடும் நம்முடைய விவசாயிகளையும், இந்திய விவசாயத்தையும் அழித்துவிடும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும்போது ஜனநாயக செயல்முறைகள் மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டுவிட்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story