கார்த்திகை தீப திருவிழா: வீடுகளில் விளக்குகள் ஏற்றி உற்சாக கொண்டாட்டம்


கார்த்திகை தீப திருவிழா: வீடுகளில் விளக்குகள் ஏற்றி உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2020 12:15 AM GMT (Updated: 30 Nov 2020 12:15 AM GMT)

கார்த்திகை தீப திருநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

சென்னை,

பக்திக்கு உகந்த கார்த்திகை மாதத்தின் சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது அகல் விளக்கு ஏற்றி பெண்கள் இறைவனை வேண்டி வழிபடுவார்கள். உள்ளத்தில் உள்ள அல்லலை நீக்கி நல்லவை ஈடேற தீப வடிவில் இறைவனை மனமுருக வழிபடுவது வழக்கம்.

அந்தவகையில் கார்த்திகை தீப திருநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை முதலே அகல் விளக்குகள், பனை ஓலைகள், பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. சென்னையில் மார்க்கெட்டுகள், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவகையில் நேற்று மக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருட்களை வாங்கினர்.

கார்த்திகை தீப திருநாளான நேற்று மாலை பெண்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீப திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள். வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூ அலங்காரம் மற்றும் அகல் விளக்குகள் சூழ குத்துவிளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டனர். இதுதவிர வீடுகளில் வாசற்படிகள் தொட்டு பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு பால்கனி, வீட்டின் வாசல்கள் என திரும்பிய திசையெங்கும் அகல் விளக்குகள் வைத்திருந்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒளி வெள்ளத்தில் காட்சி அளித்தன. மேலும் வீடுகளிலும் சிறப்பு பூஜை நடத்தி இறைவனை வழிபட்டனர். கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வெகுவாகவே இருந்தது.

இதுதவிர வீடுகளில் பனை ஓலை கொண்டு கொழுக் கட்டை செய்தனர். அதனை இறைவனுக்கு படையலிட்டு பின்னர் அக்கம்பக்கத்து வீட்டாருக்கு அளித்து மகிழ்ந்தனர். மேலும் கார்த்திகை தீப திருநாளையொட்டி பலர் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர். அந்தவகையில் சென்னையில் நேற்று கார்த்திகை தீப திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Next Story