தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் + "||" + Northeast monsoon 15% less than usual in Tamil Nadu - Minister RP Udayakumar
தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இது குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-
"தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. நீர் தேக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் வழக்கத்தை விட 15% வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது. வரும் 1-ந்தேதி (நாளை) மற்றும் 2-ந்தேதி (நாளைமறுநாள்)-களில் தென்தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை அடையாளம் காணவும், மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.மத்திய குழு நாளை வருவதையொட்டி, ஆலோசனை நடைபெறவுள்ளது".
தற்போது, உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதியை பேரிடர் மேலாண்மை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.