கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 192 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
புதியதாக திறக்கப்பட்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் பலத்தமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது 192 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. கோடைக்காலங்களில் இந்த ஏரிகள் வரண்டு விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.380 கோடி மதிப்பீட்டில் 1,486 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட செயற்கை அணை கட்டப்படும் என்று 2012-ம் ஆண்டு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, 2013-ம் வருடம் நவம்பர் 11-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் இருந்து காணொலி மூலமாக நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.
இந்த நீர்த்தேக்கத்தின் உயரம் 36.61 அடி ஆகும். 500 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்நிலையில் ‘நிவர்’ புயல்காரணமாக நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் பகுதியிலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்தால் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 28.8 அடி ஆக பதிவாகி இருந்தது. 195 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தத் தண்ணீரை தேவைப்படும் போது சென்னை குடிநீருக்காக திறந்து விட தயாராக இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தில்லைக்கரசி, தனசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story