குமரி, நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


குமரி, நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2020 1:38 PM IST (Updated: 1 Dec 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் 3ந்தேதி குமரி, நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  'புரெவி' புயல் என அதற்கு பெயரிடப்பட்டது.  இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.  பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும்.  நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், கேரளாவில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.  இது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

நாளை தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, டிசம்பர் 3ந்தேதி காலை தென்தமிழக கடல் பகுதியை புயல் நெருங்கும்.  இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவித்து உள்ளது.

Next Story