வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது கதை அனைவருக்குமே முன் மாதிரி


வாழ்த்து மழையில் நனையும் தமிழக வீரர் நடராஜன் : அவரது  கதை அனைவருக்குமே முன் மாதிரி
x
தினத்தந்தி 2 Dec 2020 2:38 PM GMT (Updated: 2 Dec 2020 2:38 PM GMT)

வாழ்த்து மழையில் நனையும் நடராஜன் அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி என உருக்கமாக ஹர்திக் பாண்ட்யா கூறி உள்ளார்.

சென்னை

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில்  ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றது.

இந்த போட்டியில் தனது  பெரிய பங்களிப்பை கொடுத்து இருந்தார்  ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. 76 பந்துகளில் 92 ரன்களை குவித்தார் அவர். ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா பெற்றார்.

ஆட்டநாயகன் விருதினை பெற்ற பின் பேசிய பாண்ட்யா, இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர் நடராஜன் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கதை அனைவருக்குமே ஒரு முன் மாதிரி .ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக சிரத்தை எடுக்க  வேண்டி இருக்கும் என கூறினார்.

இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி உள்ளார் . தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார் நடராஜன். 

நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடராஜன் சர்வதேச மைதானத்தில் களத்தில் பந்து வீச இறங்குவதற்கு முன்பே, ஹர்திக் பாண்ட்யா உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவர் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தனர். 

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனின் அருமையான ஆட்டத்திற்கும் அணிக்கான அவரது பங்களிப்புக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில்  பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.



Next Story