தமிழகத்தில் 90 நீர் நிலைகளில் 155 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


தமிழகத்தில் 90 நீர் நிலைகளில் 155 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2020 10:39 PM GMT (Updated: 2 Dec 2020 10:39 PM GMT)

தமிழகத்தில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர் நிலைகளில் 155 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வருகிற கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் இந்த ஆண்டு முதல் தவணை தண்ணீர் கடந்த செப்டம்பர் 18-ந்தேதியில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லை நுழைவிடத்தில் வினாடிக்கு 407 கன அடி வீதம் நீர் பெறப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இதுவரை 3.67 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டு உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு 2019-2020-ம் ஆண்டு இரண்டு தவணைகளில் 8 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக புதிதாக திறக்கப்பட்ட 5-வது நீர் தேக்கமான கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி சேமிக்க முடியும். அதில் 40 சதவீதம் தண்ணீர் அதாவது 204 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 972 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக 66 சதவீதம் அதாவது 67 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வீராணத்துக்கு தேவையான தண்ணீரை காவிரி மூலம் கொண்டுவரப்பட உள்ளது.

இதுதவிர பூண்டி ஏரியில் 2.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல் சோழவரம் 547 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2.84 டி.எம்.சி. மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் 3.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்கு அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 10 டி.எம்.சி. வரை இருப்பு உள்ளது.

மேட்டூர் அணையிலும் 66 டி.எம்.சி. அதாவது 93 டி.எம்.சி. என்ற மொத்த கொள்ளளவில் 71 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதேபோல் பவானிசாகர் 24, அமராவதி 3, பெரியார் 3.6, வைகை 3.35, பாபநாசம் 4.39, மணிமுத்தாறு 3.43, பேச்சிப்பாறை 3.77, பெருஞ்சாணி 2.19, கிருஷ்ணகிரி 1.45, சாத்தனூர் 27.7, சோலையாறு 3.66, பரம்பிக்குளம் 12.82, ஆழியாறு 3.31, திருமூர்த்தி 1 டி.எம்.சி. வீதம் நீர் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகள், நீர்நிலைகள் மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் சேர்த்து 155 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து புயல் சின்னம் ஏற்பட்டு உள்ளதால் பெய்யும் மழை தண்ணீர் அனைத்தையும் ஏரிகளில் சேமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழையால் நீர் நிலைகளுக்கு வந்துள்ள தண்ணீர் மூலம் விவசாயிகள் ஒரு பகுதியில் சம்பா சாகுபடியை கடந்த ஒரு வாரமாக தொடங்கி உள்ளனர். மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் போதுமான அளவு மழை இல்லாத பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். வரும் நாட்களில் பெய்யும் மழை மூலம் இந்த பகுதியில் உள்ள ஆறுகளும் நிரம்பும் பட்சத்தில் விவசாயிகள் முழுமையாக சம்பா சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையிலேயே நீர் நிலைகளுக்கு போதுமான நீர் வந்து உள்ளது. தற்போது வரவிருக்கும் மழையாலும் ஏரிகளுக்கு நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவ மழையால் மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. வரும் நாட்களில் பெய்யும் மழை மூலம் பாசனத்திற்கு தேவையான நீரும் முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story