புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் - வானிலை ஆய்வு மையம் தகவல்


புரெவி புயல்: பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2020 9:22 AM IST (Updated: 3 Dec 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல், பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (நேற்று முன்தினம்) இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் இன்று இரவு அல்லது 4-ந்தேதி (நாளை) அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை இன்று பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story