அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த் + "||" + Going to start the party work after the shooting of Annatha - Actor Rajinikanth
அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்
அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில், “வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!” என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“2017 டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி இருந்தேன். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்து விட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான்.
ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் என் உயிர் மீண்டது. என் உயிரை மீட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன்.”