புரெவி புயல் வலுவிழந்தது ; காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும்
புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை
இந்திய வானிலை மையம் வெளியிட்டு உள்ள தகவலில் புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை முழுவதும் கடந்து செல்லும் . தற்போது காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசுகிறது. 90 கி.மீ வேகத்தில் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. தற்போது மணிக்கு 16கிமீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது மேலும்,தமிழகத்தில் தென் கடலோர பகுதிகளான பம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புரெவி புயலின் தாக்கம் இருக்கும் என கூறி உள்ளது.
இந்த நிலையில் புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே புரெவி புயல் கரையைக் கடக்கும்போது வலுவிழந்து கரையைக் கடக்கும், காற்றைப் பற்றிய அச்சம் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
புரெவிப் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது
புரெவி புயல் தற்போது இலங்கையைக் கடந்து பாக் ஜலசந்தி பகுதிக்குள் வந்திருக்கிறது. இலங்கையில் நேற்று இரவு கரையைக் கடந்த புரெவிப் புயல் தரைப் பகுதியைக் கடந்து, தற்போது மீண்டும் கடல்பகுதிக்குள் வந்துள்ளது.
பொதுவாக தரைப்பகுதியைக் கடந்து மீண்டும் கடற்பகுதிக்குள் நுழையும் புயல் வலுவிழக்கும். அதுபோல் தற்போது புரெவி புயலும் மிகவும் வலுவிழந்திருக்கிறது. கடலின் வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்கிறது.
காற்று அதிகமாக வீசுவதற்கு கடலின் வெப்பம் சாதகமாக இருந்தாலும், வின்ட் ஷீர் எனச் சொல்லப்படும் காற்றின் திசையை திருப்பக்கூடிய போக்கு சாதகமாக இல்லை. ஆதலால் புரெவிப் புயல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத்தான் இருக்கிறது.
அடுத்த 24 மணிநேரத்துக்கு அதாவது நாளை(வெள்ளிக்கிழமை) பிற்பகல் வரை இந்த புரெவிப் புயல் பாம்பன் பகுதியிலேயே நிலைகொண்டிருக்கும். நாளை பிற்பகலுக்குப்பின்புதான் புரெவிப் புயல் கரைகடக்கத் தொடங்கும்.
புரெவிப் புயல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோதான் கரையைக் கடக்கும். புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்பு குறைவு
புரெவிப் புயல் தொடர்ந்து மன்னார் வளைகுடா பகுதியிலேயே நிலைகொண்டிருப்பதால், பாம்பன் பகுதியைச்சுற்றிய பகுதிகளில் மேகங்கள் வந்து கொண்டே இருக்கும், விட்டுவிட்டு கனமழை பெய்து கொண்டே இருக்கும்.
குறிப்பாக, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, டெல்டா பகுதிகளான திருவாரூர், தஞ்சை, நாகை, திருச்சி, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்.
மன்னார் பகுதியிலேயே தொடர்ந்து புரெவி புயல் மையம் கொண்டிருப்பதால் தொடர்ந்து புயல் வலுவிழக்ககூடும். இதனால் பாம்பன் கடற்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் மட்டுமே காற்று அதிகமாக இருக்கும். மற்ற பகுதிகளி்ல காற்று பலமாக இருக்காது. கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்றுவீசவே வாய்ப்புள்ளது.
புரெவி புயல் மிகவும் வலுவிழந்துதான் பாம்பன் முதல் கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்லும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோதான் புரெவி புயல் கரையைக் கடக்கும், புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு மிகக் குறைவு என பெரும்பாலன வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இனிவரும் நாட்களில் புரெவிப் புயல் மேற்கு திசையை நோக்கி அரபிக் கடல்பகுதிக்குள் வலுவிழந்துதான் நகரக்கூடும். ஆதலால், புரெவிப் புயலால் காற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. இந்தப் புயலால் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பல இடங்களில் பெய்யவும், சில இடங்களில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மக்களும் அச்சப்படத் தேவையில்லை. காற்றின் வேகம் அதிகஅளவு இருக்காது. அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் என்பதால் மழை குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
புரெவிப் புயல் நகர்ந்து செல்லும்போது தமிழகத்தின் உள்மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வரும் 7-ம் தேதிவரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே புரெவிப் புயலால் காற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. அடுத்த இரு நாட்கள் மழைகுறித்து மட்டும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story