நாளை நினைவு நாள்: ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்பு அகல் விளக்கு ஏற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முன்பு அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிசம்பர் 5, அ.தி.மு.க.வே உலகமென வாழும் கோடான கோடி தொண்டர்களுக்கும், அம்மா என்னும் மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து, அதனை உளமார நேசித்து வாழும் உலகத்தமிழர்களுக்கும், பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்.
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்னும் மாதவத்தால் வாழ்ந்து, எம் மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் லட்சியத்தை சுமந்த அந்த சத்தியத்தாய் நம்மைவிட்டு பிரிந்தாலும், நம்மிடம் அவர் ஒப்படைத்து போன அரசாட்சியை இன்று இந்திய தேசமே புகழும் நல்லாட்சியாக நாம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
ஒட்டிய வயிறுகளுக்கு எல்லாம் உணவிட்டு மகிழ்ந்து, ஓலை குடிசைக்கும் ஒரு விளக்கேற்றி, உலகத்தர கல்வி, உயரிய மருத்துவம், உழவினத்தின் நீரோட்டம் பெருக்கும் திட்டங்கள் என தாய் நாட்டில் தமிழகத்தை தலையாய மாநிலமாய் உயர்த்துவதையே லட்சியமாக கொண்டு உழைக் கின்ற இயக்கம் அ.தி.மு.க.
அதே வேளையில் அப்பனுக்கு பின் மகன், மகனுக்குப்பின் பேரன், பேரனுக்குப்பின் கொள்ளுப்பேரன் என்று கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகார கூட்டத்தை வேரறுத்து வென்றுகாட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுற்ற இந்நாளில், அவர்தம் உருவப்படத்திற்கு நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் விளக்கேற்றி வைத்து, தமிழகத்து மக்களை நெஞ்சில் சுமந்து, சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சத்தியமாக்கிட; சாத்தியமாக்கிட அகல் விளக்கு ஏற்றி வைத்து அவரது உருவப்படத்தின் முன்னே வீர சபதம் எடுப்போம்.
எங்கள் உயிர்மூச்சு உள்ளவரை முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்களை காப்போம் என, சூளுரை ஏற்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story