‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை - அரசு அறிவிப்பு


‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை - அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 12:00 AM GMT (Updated: 3 Dec 2020 11:09 PM GMT)

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

சென்னை, 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1-ந்தேதி இரவு புயலாக மாறியது. ‘புரெவி’ என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் தாக்குதலை ஏற்படுத்திவிட்டு கரையை கடந்தது. அதன்பின்னர், மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” 3-ந்தேதி (நேற்று) , மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. இந்தப்புயல், 4-ந்தேதி (இன்று) அதிகாலையில் பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதி (இன்று) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு ஈடாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story