கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்


கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு: சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
x
தினத்தந்தி 4 Dec 2020 1:34 PM IST (Updated: 4 Dec 2020 1:34 PM IST)
t-max-icont-min-icon

கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும். இது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழையும், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், வேலூர் ஆகிய உள் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். 

ராமநாதபுரத்தில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வருவதால் தொடர்ந்து சென்னைக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவைப் பார்க்கும் போது, தமிழகத்தில் 11 இடங்களில் அதி கனமழையும், 20 இடங்களில் மிகக் கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.

மீனவர்களைப் பொறுத்தவரை.. மன்னார்வளைகுடா - தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே, மீனவர்கள் நாளை காலை வரை இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story