கடலூரில் பெருமாள் ஏரி நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கடலூர் பெருமாள் ஏரி முழுகொள்ளளவை எட்டியதால், மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்,
வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் கன முதல் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரி, முழு கொள்ளளவான 6.5 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியிலிருந்து 9 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோரத்தில் உள்ள 23 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆதிநாராயணபுரம், திருச்சோபுரம், ஆலப்பாக்கம், ஆண்டார் முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட 23 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story