சென்னையில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்


சென்னையில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்
x
தினத்தந்தி 4 Dec 2020 2:47 PM IST (Updated: 4 Dec 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை 2-வது முறையாக மீண்டும் முடங்கி உள்ளது.

சென்னை,

நிவர் புயல் காரணமாக கடந்த மாத இறுதியில் சென்னையில் 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வீடுகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.

இந்த பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், வங்க கடலில் உருவான புரெவி புயலால் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு முதல் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையின் மைய பகுதிகளான அடையாறு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அசோக்நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை நீர் தேங்கியிருந்தது.

புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், அயனாவரம், அம்பத்தூர், மாதவரம் பால்பண்ணை, மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த முறை பெய்த மழையால் தேங்கியது போன்றே இந்த மழைக்கும் அதிகளவு மழை நீர் தேங்கி உள்ளது.

மழை காரணமாக கடந்த 2 வாரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை 2-வது முறையாக மீண்டும் முடங்கி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மழை வெள்ள பாதிப்பை தற்காலிகமாக சரி செய்ய அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளும், புறநகர் பகுதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Next Story