“நடிகர் ரஜினிகாந்த் ஒரு தேசப்பற்றாளர்; கட்சி தொடங்குவது அவர் உரிமை” - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
நடிகர் ரஜினிகாந்த் ஒரு தேசப்பற்றாளர் என்றும் கட்சி தொடங்குவது அவரது உரிமை என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரி மாதம் கட்சியை தொடங்க இருப்பதாகவும், அது பற்றிய அறிவிப்பை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்போவதாகவும் அறிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ரஜினியின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் ரஜினியின் கட்சி தொடங்கும் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் ஒரு தேசபற்றாளர் என்றும் கட்சி தொடங்குவது அவரது உரிமை என்றும் தெரிவித்தார். மேலும் ரஜினியின் கட்சி தொடர்பான அறிவிப்பு குறித்து அகில இந்திய தலைமையின் முடிவைப் பொறுத்தே கருத்து கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அகில இந்திய தலைமை இது குறித்து முடிவு செய்து அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story