மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துவிட்ட போதிலும், தொடர்ந்து பெய்துவரும் மழையால், காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளநிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்திருப்பதால் நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சேதமடைந்த பயிர்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதிப்புகளை சரிசெய்ய தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதியுதவி பெற்று நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story