கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையனுக்கு,டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையனுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 69 சதவீதத்துக்கும் கூடுதலாக இருக்கக்கூடாது. 100 விழுக்காட்டையும் அவர்களே அனுபவிக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்? என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் சமூகநீதிக்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது போராடி பெறப்பட்ட உரிமை ஆகும். இந்த இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் 9-வது அட்டவணையில் சேர்த்து பாதுகாப்பு அளித்தது. இந்தநிலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை துடைப்பதற்காக கடந்த 10 மாதங்களாக பல்வேறு சட்டப்போராட்டங்களும், அரசியல் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகளையும், அதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடும் சமூகநீதிக்கு எதிரான வக்கீல்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடங்களில் சமூகநீதிக்கு ஆதரவானவர்களை நியமிக்க வேண்டும். சமூகநீதியில் அக்கறை கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை செய்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்துவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story