தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது


தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது
x
தினத்தந்தி 4 Dec 2020 9:25 PM GMT (Updated: 4 Dec 2020 9:25 PM GMT)

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.

சென்னை, 

வங்கக்கடலில் நிலவி வந்த ‘புரெவி’ புயல் தமிழகத்தின் கடலோர பகுதியை அடைந்து, நேற்றுமுன்தினம் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை முதல் கனமழை கொட்டி தீர்த்து இருக்கிறது.

அதிகனமழையை பொறுத்தவரையில் 21 செ.மீ.க்கு மேல் மழைப்பொழிவும், மிக கனமழைக்கு 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலான மழைப்பொழிவும், கனமழைக்கு 6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரையிலான மழைப்பொழிவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 36 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ‘கொள்ளிடம் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்), லால்பேட்டை (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மணல்மேடு (நாகப்பட்டினம்), காட்டுமன்னார்கோவில் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சீர்காழி (நாகப்பட்டினம்), குடவாசல் (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்)’ ஆகிய 11 இடங்களில் அதிகனமழை (21 செ.மீ.க்கு மேல்) கொட்டியது.

அதேபோல், ராமேசுவரம் (ராமநாதபுரம்), பேராவூரணி (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்), பாபநாசம் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), பண்ருட்டி (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆடுதுறை (தஞ்சாவூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), பாண்டவையாறு (தஞ்சாவூர்), மயிலாடுதுறை ஆகிய 23 இடங்களில் மிக கனமழை (12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில்) பெய்துள்ளது.

ஜெயங்கொண்டம் (அரியலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), வல்லம் (தஞ்சாவூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருமானூர் (அரியலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), செந்துரை (அரியலூர்), வேப்பூர் (கடலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) உள்பட 42 இடங்களில் கனமழையும் (6 செ.மீ. முதல் 11 செ.மீ. வரையில்) பெய்து இருக்கிறது. இதுதவிர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் 179 இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்துள்ளது. இதேபோல் நேற்று காலை 8.30 மணி முதல் தமிழகத்தில் பல இடங்களில் மிக கன முதல் கன மழையும் பெய்தது.

Next Story