அமராவதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை


அமராவதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2020 4:53 AM GMT (Updated: 6 Dec 2020 4:53 AM GMT)

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தளி, 

உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் அட்சய பாத்திரம் மலைப்பகுதி ஆகும். அங்கு மழைக்காலங்களில் உற்பத்தியாகின்ற வெள்ளம் நொடிப்பொழுதில் அடிவாரத்தை அடைந்து சமவெளி பரப்புகளில் தாழ்வான பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் சிற்றாறுகள் மூலமாக பிரதான ஆறுகளுடன் சேர்ந்து கடலில் கலந்து விடுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணை, வனப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற அமராவதி ஆற்றை தடுத்து இந்த அணை கட்டப்பட்டது. இதனால் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டதுடன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. குடிநீர் திட்டங்கள் மூலமாக பொதுமக்களும் பயனடைந்தனர்.

பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திட்டத்தின் மூலம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பாசன வசதியை அளித்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதற்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு உதவிகரமாக இருந்து வருகிறது. அப்போது வனப்பகுதியில் நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள மூலிகைகள் வெள்ளப்பெருக்கால் அணைப் பகுதிக்கு அடித்து வரப்படுகிறது. இதனால் அணையில் தேங்கியுள்ள தண்ணீர் இயல்பாகவே சுவையுடையதாக திகழ்கிறது.

ஆண்டுதோறும் ஏற்படுகின்ற வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை மற்றும் புயல் மழையின் போது அணை அதிகப்படியான நீர்வரத்தை பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையின் போது அணை அதன் முழு கொள்ளளவை 2 முறை நெருங்கியது. அதைத்தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதுடன் அதன் தொடர்ச்சியாக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது.

இந்த நிலையில் புரெவி புயல் தீவிரமடைந்ததால் கடந்த 3 நாட்களாக அணையின் நீர் ஆதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் இரவு 85 அடியை கடந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடிக்கு மேலாக இருந்து வந்ததால் உபரி நீர் திறப்பதற்கான சூழலும் நிலவியது.

இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பாபுசபரீஸ்வரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் இரவு-பகலாக முகாமிட்டு வந்தனர். மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அணையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி மூலம் ஒலியும் எழுப்பப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த சூழலில் நேற்று பகல் 12 மணி அளவில் அணை நீர்மட்டம் 88 அடியை கடந்தது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 கண் மதகுகளில் 3 மதகுகள் வழியாகவும், பிரதான கால்வாய் மூலமாகவும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதனால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர்ப்பரப்பில் 88 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்து 232 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றிலும், பிரதான கால்வாயில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Next Story