சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் அன்பழகன்
சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியுள்ளது. ஆனால் தன் மீதான புகார்களை மறுத்த சூரப்பா, தான் எந்த ஊழலும் செய்யவில்லை, விசாரணைக்கு தயார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர். சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், “ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்” என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பாகன் பதிலளித்துள்ளார். சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் விமர்சித்துள்ளார். மேலும் அரசு மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story