தமிழக முதல்-அமைச்சர் வீடு அருகே பாதுகாப்பு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி; நள்ளிரவில் பரபரப்பு
தமிழக முதல்-அமைச்சர் வீடு அருகே முக கவசம் அணியாத பாதுகாப்பு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் முதல்-அமைச்சர் வீடு அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் மீது சந்தேகம் கொண்டு போலீசார் மடக்கினார்கள். காரில் பயணித்தவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் முககவசம் அணியவில்லை என்று தெரிகிறது. முககவசம் அணியாமல் எனது காரை ஏன் மடக்கினீர்கள்? என்று காரில் வந்தவர் போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். முதல்-அமைச்சர் வீடு அருகே இந்த தகராறு நடந்ததால், இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் பறந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்து, இரவு ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவர் நடத்திய விசாரணையில் தகராறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், குடிநீர்வடிகால் வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்வதும் தெரியவந்தது. துணை கமிஷனர் சமாதானம் செய்ததன் பேரில், தகராறில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story