ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு


ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2020 2:41 AM IST (Updated: 8 Dec 2020 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடைவிதித்து தமிழக அரசு கொண்டுவந்த அவசரசட்டத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னை,

நாடு முழுவதும் பல இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் என்று பலரும் ஆன்லைன் மூலம் ரம்மி சூதாட்ட விளையாட்டை விளையாடி பெருந்தொகையை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் பலர் தற்கொலையும் செய்துகொண்டனர். இதையடுத்து ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 21-ந்தேதி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்து தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து ரம்மி விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் தனியார் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல. அது திறமையை வளர்க்கும் விளையாட்டு என கடந்த 1968-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் இந்த விளையாட்டுக்கு தடைவிதிக்காத நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்திருப்பது தவறானது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ‘இந்த விளையாட்டுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையையும், அதுதொடர்பான அவசர சட்டத்தையும் ரத்துசெய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

அதை நீதிபதிகளின் ஏற்கவில்லை. தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள், தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story