ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது: தமிழகத்தில் டாக்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் டாக்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சென்னை,
ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழகத்தில் டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு கிளை) தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, கவுரவ செயலாளர் டாக்டர் ஏ.கே.ரவிகுமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “ மத்திய அரசின் அரசிதழில் கடந்த நவம்பர் 19-ந் தேதி ஒரு முக்கியமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில், ‘இதுவரை அலோபதி டாக்டர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
‘நிதி ஆயோக்’ அமைப்பு, 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி மற்றும் பொதுமக்களுக்கான சுகாதாரமுறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை ‘நவீன மருத்துவம் ஆயுஷ்’ என்று ஒரே கலவை முறைக்குள் 2030-ம் ஆண்டில் கொண்டுவர முயற்சித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையின் மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மருத்துவமுறைகள் கலப்படம் செய்யப்பட்டு, நம் நாட்டின் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை முழுவதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், அதைச் சார்ந்த கட்டாய ஓராண்டு மருத்துவ பயிற்சியும் பெற்று முதுநிலைப்படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு எழுதிய பின்னரே மாணவர்கள் அறுவைசிகிச்சை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கான எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய டாக்டர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
மேலும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்துகள் ஆயுர்வேத மருத்துவமுறையில் இதுவரை இல்லை. இதனை ஆராய்ந்து பார்க்கும்போது நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனம்.
எனவே, இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நிதி ஆயோக் அமைத்துள்ள குழுக்களை கலைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 8-ந் தேதி (இன்று) மதியம் 12 மணியளவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 11-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் கொரோனா மற்றும் அவசரசிகிச்சை தவிர்த்து மற்ற எல்லா சிகிச்சைகளையும் தவிர்க்க உள்ளோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story