புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சருடன் மத்திய குழு சந்திப்பு
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்தியக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.
சென்னை,
வங்கக்கடலில் கடந்த மாதம் 24-ந் தேதி உருவான ‘நிவர்’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயல் பாதிப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக ‘புரெவி’ புயல் உருவானது.
இந்த புயல் தமிழகத்தை நெருங்குவதற்கு முன்பே வலுவிழந்துவிட்டது. ஆனாலும் கடலூர், நாகை, மயிலாடுதுறை, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.
இந்த நிலையில் ‘நிவர்’ புயல் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்தியக்குழுவினர் கடந்த 5-ந் தேதி சென்னை வந்தனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், நூக்கம்பாளையம், மாமல்லபுரம், மரக்காணம், கடலூர் ஆகிய பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
அதன்பிறகு புதுச்சேரி மாநிலத்திலும் வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து காசிமேடு, எண்ணூர், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளசேதங்களை பார்வையிட்ட பிறகு மத்தியக்குழுவினர் நேற்றிரவு சென்னை திரும்பினார்கள்.
இன்று காலை தலைமை செயலகம் சென்ற மத்தியக் குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடப்பதால், மழை வடிந்த பிறகு முழுமையாக சேதங்களை கணக்கிட்டு தரும்படி முதலமைச்சர் பழனிசாமியிடம் மத்தியக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். இதுவரை தாங்கள் பார்த்த பகுதிகளில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட சேத விவரப்பட்டியலை மத்தியக் குழுவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட மத்தியக்குழுவினர் மத்திய அரசிடம் அதனை சமர்ப்பிப்பதாக தெரிவித்தனர். மத்தியக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு உரிய வெள்ள நிவாரண நிதியை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story