மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவு


மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 10 Dec 2020 8:21 AM IST (Updated: 10 Dec 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவுகிறது.

சென்னை, 

மருத்துவப்படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் (வியாழக்கிழமை) கலந்தாய்வு நிறைவு பெற இருக்கிறது. நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் 459 பேர் பங்கு பெற்று, 50 பேர் அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களையும், 102 பேர் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களையும், 12 பேர் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்த பி.டி.எஸ். இடங்களையும், 27 பேர் தனியார் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்த பி.டி.எஸ். இடங்களையும் தேர்வு செய்தனர்.

இதுவரை நடந்து முடிந்த பொது கலந்தாய்வு மூலம் அரசு, தனியார் சுயநிதி கல்லூரிகளில் இருந்த 3,279 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும், 148 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் நிரம்பி இருக்கின்றன. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு 15 சதவீதம் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டன. அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அகில இந்திய அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டன. 

அதன்படி நிரப்பப்பட்டு மீதமிருக்கும் காலியிடங்கள் மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் 15 சதவீதம் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் அகில இந்திய கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு மீதமிருந்த 132 எம்.பி.பி.எஸ். இடங்களும், 29 பி.டி.எஸ். இடங்களும் மாநில அரசுக்கு கிடைத்து இருக்கின்றன. கலந்தாய்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

Next Story