மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 11 Dec 2020 6:29 AM IST (Updated: 11 Dec 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை தீவிரம் அடைந்து இருந்தது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி நிவர் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர், 30-ந்தேதி வங்கக்கடலில் புரெவி புயல் நிலைக்கொண்டிருந்து, தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக மழை குறைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதுதவிர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘பழவிடுதி 5 செ.மீ., பாபநாசம், வேப்பந்தட்டை, சோலையாறு, வைகை அணை தலா 3 செ.மீ., திருப்பத்தூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ.’ உள்பட ஓரிரு இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

Next Story