விதிமுறைக்கு புறம்பாக செயல்படும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்


விதிமுறைக்கு புறம்பாக செயல்படும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2020 11:40 AM IST (Updated: 11 Dec 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை சுங்கச்சாவடி அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை, துரைப்பாக்கம், பெருங்குடி, அக்கரை, போரூர் போன்ற இடங்களில் விதிமுறைகளுக்கு புறம்பாக சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை நீக்க வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு அளித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர், இது மாநகராட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இது குறித்து முதல்வரிடம் புகார் அளிக்குமாறு கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது மத்திய அரசு வகுத்த விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டுவரும் சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் கோரிக்கை விடுத்தார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடந்த மாதம் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டுவரும் சுங்கச் சாவடிகளை அகற்றக் கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சோழிங்கநல்லூர் அக்கரை சுங்கச்சாவடி அருகே திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக எம்.பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story