கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக குறைந்தது;சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி -மாநகராட்சி கமிஷனர்
சென்னையில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக குறைந்துள்ளது எனவும், முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் 15 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. இதனால், இந்த ஆண்டு 60 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. மழை பொழிவு அதிகம் இருந்ததால், கடந்த 6 நாட்களில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 1.05 கோடி மக்களுக்கு, 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் உணவு தயாரித்து, தரமான உணவை வழங்கியிருக்கின்றோம்.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் சென்னையில் பாதிப்பு இருந்தாலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், கடந்த ஆண்டை விட பாதிப்பு குறைவாகவே இருந்தது.
என்ஜினீயர்கள் ஆய்வுஇருந்தாலும் ஒரு சில இடங்களில் மழை நீர் மிக அதிகமாக தேங்கி இருந்தது. அந்தவகையில் தென் சென்னை பகுதிகளான பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் மழை நீர் அதிகமாக தேங்கியது. அந்தவகையில் மழை நீர் தேங்கி, மிகவும் சவாலாக கருதப்படும், 23 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்தபகுதிகளுக்கு இனி எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நிரந்திர தீர்வு காண மாநகராட்சி என்ஜினீயர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது.
பள்ளிக்கரனை சதுப்பு நிலம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்பட 5 இடங்களில் ரூ.400 கோடி செலவில் வடிகால்கள் அமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஒப்புதல் வாங்கும் பணி தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் 50 செ.மீ மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது.
தடுப்பு மருந்துநகர வளர்ச்சியால் பள்ளிக்கரனை சதுப்பு நில பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் பெருங்குடி குப்பை கிடங்கின் மொத்த பரப்பளவான 225 ஏக்கரில், 125 ஏக்கர் மீண்டும் சதுப்பு நிலமாக மாற்றப்படும். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்ட உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட, 35 மடங்கு அதிகமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கும், 2–ம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 3–ம் கட்டமாக முதியவர்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.