வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி விடுவிப்பு
வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்தையும், அவரது மனைவி ஸ்ரீநிதியையும் விடுவித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கடந்த 2015–ம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்தார்.
அதன் மூலம் கிடைத்த ரூ.7.36 கோடியை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்று கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக கடந்த 2018–ம் ஆண்டு வருமானவரித் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
விடுவிக்க வேண்டும்இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி என் சதீஷ்குமார் விசாரித்தார்.
அப்போது, மனுதாரர்கள் இருவரது சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, ‘வருமானவரி கணக்கு மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே மனுதாரர்கள் இருவருக்கும் எதிராக வருமானவரித் துறை வழக்கு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
விடுவிப்புஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமானவரித் துறை சார்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என் சதீஷ்குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார். அதில், வருமானவரித் துறையினர் தொடர்ந்த வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரத்தையும், ஸ்ரீநிதியையும் விடுவிப்பதாக கூறியுள்ளார்.