‘மக்கள் தலைவரே!’‘எங்கள் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே! தமிழக மக்களின் கடைசி நம்பிக்கையே! ரஜினிகாந்தின் வீட்டை சுற்றி விதவிதமான போஸ்டர்கள்
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது வீட்டை சுற்றி வித விதமான போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த
சென்னை
ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் நியமித்தார். தற்போது தனது புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
71–வது பிறந்தநாள் விழாஇந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் காரணமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதை வரவேற்கும் விதமாக அவரது பிறந்தநாளையொட்டிய வாழ்த்து போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் விதம் விதமாக அச்சிட்டு ரஜினிகாந்தின் வீடு அமைந்து உள்ள போயஸ்கார்டன் பகுதி மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டி உள்ளனர்.
சட்டசபையில் ஒலிக்கும்அவற்றில், ‘ரஜினி எனும் நான் என்று விரைவில் சட்டசபையில் ஒலிக்கும்! அன்று தமிழக மக்களின் வாழ்வு செழிக்கும்!’, ‘மக்கள் தலைவரே!’, ‘மக்களின் முதல்வரே’, ‘ஆன்மிக அரசியலின் ஆளுமையே’, ‘அரசியலின் தூய்மையே’, ‘வெள்ளை மனமே’, ‘எவருக்கும் அஞ்சாதவரே’, ‘எங்கள் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே!’, ‘தமிழக மக்களின் கடைசி நம்பிக்கையே!’ ‘மக்களின் நெஞ்சம் நிறைந்தவரே!’ என வித்தியாசமான வாசகங்கள் அடங்கி இருந்தன.
நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, வாழ்த்து போஸ்டர்கள் அனைத்திலும் ரஜினியின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்தவர்களின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றனவே தவிர மாநில நிர்வாகிகளின் புகைப்படங்கள் எந்த போஸ்டர்களிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.