பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகம் ஒன்றை வைத்திருந்தார். இந்த அலுவலகத்தில் இருந்தபடிதான் அவர் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் அந்த அலுவலகத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டார். இதுதொடர்பாக கோர்ட்டில் இளையராஜா வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய்பிரசாத், ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story